அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சையால் ஓபிஎஸ், பழனிசாமி தரப்பினர் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர். இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் வலுத்து வரும் நிலையில், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தரப்பு பொதுக்குழுவை கூட்டியது. அப்போது பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை பிறப்பித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையி்ல், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது. எடப்பாடிக்கு சாதகமாக தீர்ப்பு வரும் பட்சத்தில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் இன்னும் சூடு பிடிக்கும்.
மகாராஷ்டிரா தீர்ப்பு…
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அணியில் இருந்த ஏக்நாத் ஷிண்டே 40 சிவசேனா எம்.எல்.ஏக்களுடன் கட்சியில் இருந்து பிரிந்து சிவசேனா கட்சிக்கு உரிமை கோரினார். ஷிண்டேவுக்கு அதிக ஆதரவு இருப்பதால் சிவசேனா கட்சியின் வில் சின்னம் அவருக்கே ஒதுக்கப்பட்டது. இதே பல தமிழகத்தில் எடப்பாடி தரப்பிற்கு அதிக ஆதரவாளர்கள் உள்ளதால் தீர்ப்பு இ.பி.எஸ்க்கு ஆதரவாக வரலாம் என அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.