குரங்கு அம்மை நோய் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார்.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், அனைத்து மாநில தலைமை செயலாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, 1 ஜனவரி 2022 முதல் 22 ஜூன் 2022 வரை, ஆய்வக பரிசோதனைகளுக்கு பிறகு, 50 நாடுகளைச் சேர்ந்த 3,413 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளையும் (86%) அமெரிக்காவையும் (11%) சேர்ந்தவர்களாவர். இது உலக அளவில் மெதுவாக, அதேவேளையில், நிலையாக தொற்று பரவி வருவதை எடுத்துக்காட்டுகிறது.
இந்த நோய் பாதிப்பு உலக அளவில் அதிகரித்து வருவது, இந்தியாவிலும் தேவையான ஆயத்த நிலையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. எனவே, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பின்வரும் நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும். அதன்படி, மாநில எல்லைப்பகுதி நுழைவிடங்களில் உள்ள சுகாதார கண்காணிப்புக் குழுக்கள், நோய் அறிகுறியுடன் உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் கண்காணிப்பு குழுக்கள் மற்றும் மருத்துவர்கள், மாறுபட்ட நோய் கண்டறிதல், நோய் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது பாதிப்பு வாய்ப்பிருப்பவர்கள் அல்லது பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரக்கும் பயிற்சி மற்றும் மறுபயிற்சி அளிப்பதுடன், பாதிப்பு கண்டறியப்பட்டால், தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல் மற்றும் தேவையான கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாநில நுழைவு இடங்களில் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் அனைவரையும் பரிசோதனை செய்யவேண்டும். நோயாளிகளை தனிமைப்படுத்துதல், அல்சர் பாதிப்பிலிருந்து பாதுகாத்தல் மற்றும் அதுதொடர்பான சிகிச்சை அளிப்பதுடன், தொடர்ந்து கண்காணித்து உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்பை தடுக்க வேண்டும். குறிப்பிட்ட சில சுகாதார மையங்களில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் எளிமையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதிப்பு பற்றிய தகவலை முறையாக தெரிவிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்.

குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவோர் அல்லது பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற ஏதுவாக, குறிப்பிட்ட சில மருத்துவமனைகளை தேர்வு செய்து, அங்கு போதுமான மனித வளம் மற்றும் மருத்துவ சாதன கையிருப்பை உறுதி செய்ய வேண்டும். இது தவிர, ஸ்புட்னிக் வி (Sputnik v) தடுப்பூசியை இரண்டு டோஸ் செலுத்தியவர்கள், பூஸ்டர் டோஸ் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் செலுத்திக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Also Read: TRB முக்கிய தகவல்: மொத்தம் 1,060 காலி பணி இடங்கள்…! நேர்காணல் கிடையாது என தேர்வு வாரியம் அறிவிப்பு…!