நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக இருப்பவர் சாட்டை துரைமுருகன். இவரை கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் விலகிவிட்ட நிலையில், சீமானுக்கு பக்க பலமாக இருந்து வருகிறார். சீமான் – விஜயலட்சுமி விவகாரத்தில் சமரசம் செய்ய முயற்சித்தார். நாம் தமிழர் கட்சிக்கு எதிராக வரும் விமர்சனங்களுக்கு காட்டமான எதிர்வினைகள் ஆற்றி வருகிறார். அதேபோல், ஆளும்கட்சியான திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்.
இதற்கிடையே, திமுக தலைவர்கள் குறித்து அருவருக்கத்தகையில் பேசியதாக புகார்கள் கூட அளிக்கப்பட்டுள்ளன. சில சமயங்களில் கைது செய்யப்பட்டு, சிறையிலும் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே, சாட்டை துரைமுருகன் நடத்தும் யூடியூப் சேனலில், வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்ட ராஜனுக்கு எதிரான வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. வைகுண்ட ராஜனும் சீமானுக்கும் நெருக்கமானவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதேபோல பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் தான், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “திருச்சி துரைமுருகன் நடத்தும் “சாட்டை” வலையொளிக்கும் (YouTube Channel) நாம் தமிழர் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அந்த யூடியூப் சேனலில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவரது தனிப்பட்டக் கருத்தாகும். அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று குறிப்பிட்டுள்ளார். சீமான் வெளியிட்ட அறிக்கையை சாட்டை துரைமுருகன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த காலங்களில் சாட்டை துரைமுருகன் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து சீமான் நீக்கியிருந்தார். பின்னர், மீண்டும் சேர்த்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.