கேளம்பாக்கம் அருகே, இளைஞர் ஒருவர், கடைவீதியில், பட்ட பகலில், கொடூரமான முறையில், வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கேளம்பாக்கம் அடுத்துள்ள, புதுப்பாக்கம் கிராமத்தில், இருக்கின்ற ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், சுகன்யா (38) என்பவர் வசித்து வந்தார். இவருடைய கணவரின் பெயர் வெங்கடேசன். இந்த தம்பதிகளுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன. வெங்கடேசன் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில், சில வருடங்களுக்கு முன்னர் சுகன்யா தன்னுடைய இரண்டு குழந்தைகளோடு, புதுப்பாக்கத்தில் இருக்கின்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், தங்கி, புதுப்பாக்கம் ஊராட்சி அலுவலகம் அருகே வாடகை கட்டிடத்தில் ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி வந்தார். அப்போது, சுகன்யாவுக்கும், அவருடைய கடையை ஒட்டி இருக்கக்கூடிய பகுதியில் மின் சாதனங்களை சரி பார்க்கும் கடை ஒன்றை நடத்தி வந்த பாலாஜி (26 ) என்ற இளைஞருக்கும் முறை தவறிய உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் தான், சென்ற வருடம் நவம்பர் மாதம் ஏழாம் தேதி சுகன்யா கொடூரமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கேளம்பாக்கம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டதில், சுகன்யாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த பாலாஜியின் தந்தை குமார் இந்த கொலையை செய்திருக்கிறார் என்ற விவரம் தெரியவந்தது. ஆகவே அவரை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், பாலாஜி நேற்று தன்னுடைய கடையில் அமர்ந்து பணியாற்றிக் கொண்டிருந்தபோது, காரில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், பாலாஜியின் கடைக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டியது.
ஆனாலும், அவர்களிடமிருந்து தப்பிக்க வெளியே ஓடிவந்த பாலாஜி, சாலையோரம் இருந்த தடுப்புகளில், தடுமாறி, கீழே விழுந்தார். அதன் பிறகு, அவரை சுற்றி வளைத்த அந்த கும்பல். தலை, கை, கால், முகம் போன்ற 20க்கும் ஏற்பட்ட பகுதிகளில், கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பி சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உடன் கேளம்பாக்கம் காவல்துறையினர், அந்த பகுதிக்கு சென்று, பாலாஜியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலாஜியை கொலை செய்துவிட்டு, காரில் தப்பிச் சென்ற நபர்கள் தொடர்பாக தகவல் வழங்கப்பட்டது. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், காவல்துறையினர் உஷார் படுத்தப்பட்டனர். தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டதன் விளைவாக, மதுராந்தகம் அருகே, தொழுப்பேடு பகுதியில் அவர்களை காவல் துறையினர் பிடித்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது சென்ற வருடம் கொலை செய்யப்பட்ட சுகன்யாவின் சகோதரர்கள் இருவரும், மேலும் அவர்களுடைய நண்பர்களும் என்று தெரிய வந்தது. தங்கையை கொலை செய்தவர்களை பழிக்கு பழிவாங்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், நடந்த இந்த கொலை சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.