ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களாக மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்ட நிலையில், அது குறித்து ஆய்வு நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
நேற்றிரவு கடுமையான மழை பெய்தது. தொடர்ந்து பெய்தும் வருகிறது. இன்றிரவு புயல் கரையைக் கடக்கும் என செய்தி வந்துள்ளது. இந்நிலையில், கட்டுப்பாட்டு அறையில் இருந்து காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியாளர்களை தொடர்பு கொண்டு கள நிலவரங்களை கேட்டறிந்தோம். நிவாரணப் பணிகள் எந்த அளவுக்கு நடந்து வருகிறது என்பதையும் கேட்டு வருகிறோம்.
இன்று இரவு கடுமையான மழை பெய்யும் என்பதால், முழுமையான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை தாண்டி மற்ற மாவட்டங்களில் உள்ள பொறுப்பு அமைச்சர்களும் பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். சென்னையில் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. அப்படியே இருந்தாலும் சமாளித்துக் கொள்வோம்” என தெரிவித்தார்.