மனிதர்களாகிய நாம் காய்ச்சல் தலைவலி மற்றும் இருமல் போன்ற நோய்கள் தாக்கும் போது மருந்து மாத்திரைகளை நிவாரணத்திற்காக பயன்படுத்துகிறோம். சிலருக்கு இதய நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் இருக்கும். அவர்கள் தொடர்ந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். பொதுவாக மருந்து மாத்திரைகளை பயன்படுத்தும் போது அவற்றில் பின்பற்ற வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டிய முறைகள் பற்றி மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அவற்றை இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
சில மாத்திரைகளின் நடுவே சரியாக கோடு இருக்கும். இது அந்த மாத்திரைகளை டோஸேஜ் அளவில் சரி சமமாக பிரித்து சாப்பிட வேண்டும் என்பதற்காகத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது மருத்துவர் 30 மில்லி கிராம் அளவு மாத்திரையை பரிந்துரைக்கிறார். ஆனால் மருந்து கடையில் அதே மாத்திரை 60 மில்லி கிராம் அளவு தான் கிடைக்கிறது எனில் அந்த மாத்திரையை வாங்கி சரிசமமாக பிரித்து பயன்படுத்துவதற்காக தான் இந்தக் கோடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
மேலும் எல்லா மாத்திரைகளிலும் இது போன்ற கோடுகள் பயன்படுத்தப்பட்டிருக்காது. அதற்குக் காரணம் அந்த மருந்துகளில் இருக்கும் வீரியம் அவை நம் உடலில் ஏற்படுகின்ற தாக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும். சில மாத்திரைகள் என்டெர்ரிக் கோட்டட் முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும். இந்த மாத்திரைகளை நாம் சாப்பிடும் போது நம் இரைப்பையில் இருக்கும் நொதிகளால் இந்த மருந்து பாதிக்கப்படாமல் நேரடியாக குடலில் சென்று சேர்வதற்காக இந்தக் கோட்டட் அமைப்பு செய்யப்பட்டிருக்கிறது.
மேலும் சில மாத்திரைகளை பயன்படுத்தும் போது சில உணவுகளை தவிர்க்க வேண்டும். உதாரணத்திற்கு வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்தும் போது சுவையூட்டப்பட்ட பானங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் இவற்றில் இருக்கக்கூடிய கார்பன் டை ஆக்சைடு மருந்துகளோடு கலந்து எதிர் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இது சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பாதிக்கும் என்பதால் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். மேலும் ஆன்ட்டி பாக்டீரியல் மருந்துகளான பென்சிலின் சிப்ரோபிளாக்சி போன்ற மருந்துகளை பயன்படுத்தும் போது பால் மற்றும் பாலில் இருந்து கிடைக்கக்கூடிய பொருட்களை கொள்வதை தவிர்க்க வேண்டும்.