செர்பிய டென்னிஸ் வீரர் ஜோகோவிச், தனக்கு வழங்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.
கடந்த 2022ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக, ஜோகோவிச் மெல்போர்ன் விமான நிலையம் சென்றார். அப்போது, கொரோனா தொற்று பரவல் காலம் என்பதால், மருத்துவப் பரிசோதனைகளுக்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் அவரது விசா ரத்து செய்யப்பட்டது.
மேலும், அவர் தடுப்பூசி போடப்படாததால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். ஒரு சில நாட்கள் அவர் ஆஸ்திரேலியா ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில், புத்தாண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் ஜனவரி 12ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தொடரில் 10 முறை கோப்பை வென்றுள்ள, உலகின் ‘நம்பர்-7’ வீரர், செர்பியாவின் ஜோகோவிச் 37, முதல் சுற்றில் ஆஸ்திரேலிய இளம் வீரர் நிஷேசை எதிர்கொள்கிறார்.
இந்நிலையில் தான், ஜோகோவிச் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், ”எனக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் இருந்தன. கொரோனா காலத்தில் மெல்போர்னில் உள்ள ஒரு ஹோட்டலில் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்தேன். அப்போது, எனக்கு விஷத்தன்மை கொண்ட உணவுகளை வழங்கியுள்ளனர். நான் செர்பியாவுக்குத் திரும்பி வந்தபோது தான் இந்த விஷயம் எனக்கு தெரியவந்தது.
இதை நான் யாரிடமும் சொன்னதில்லை. செர்பியாவுக்குத் திரும்பியதும் நடத்தப்பட்ட நச்சு சோதனையில், எனது உடல் ரத்தத்தில் ஈயம், பாதரசம் ஆகியவை அதிகப்படியாக இருந்தது. மெல்போர்ன் அல்லது ஆஸ்திரேலியா மீது எனக்கு எந்த வெறுப்பும் இல்லை. எனக்கு மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும். கடந்த 2 முறை நான் ஆஸ்திரேலியா வந்தபோதும், பாஸ்போர்ட் பரிசோதனைக்கு சென்றபோது எனக்கு பழைய நினைவுகள் பெரும் வேதனையை ஏற்படுத்தியதாக கூறியுள்ளார்.