அதிமுக வரலாற்றில் முதல் முறையாக பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகள் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியதில் இருந்து அக்கட்சி முன் எப்போதும் கண்டிராத பல்வேறு அதிரடி திருப்பங்களை சந்தித்து வருகிறது. சட்டவிதிகளின்படி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தான்தான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவிக்கிறார். ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பினரோ ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவாதியாகிவிட்டதாக தெரிவிக்கின்றனர்.
உட்கட்சியில் சிறுசிறு சலசலப்பாக தொடங்கிய இந்த பிரச்சனை தற்போது இருதரப்பினருக்கும் இடையேயான சட்டப்போராட்டமாகவும் மாறியுள்ளது. அதிமுகவில் தன்னை தலைமை நிலையச் செயலாளராகவே தற்போது அடையாளப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரை பொதுச்செயலாளராக்கி கட்சியின் வலுவான ஒற்றைத் தலைமையாக்க அவரது ஆதரவாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் வரும் 11ஆம் தேதி பொதுக்குழுவை கூட்டியுள்ளனர்.
ஆனால், இவ்வாறு பொதுக்குழு கூட்டப்படுவதை எதிர்க்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கே உண்டு என்று வாதிட்டு வருகின்றனர். இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதியாகிவிட்டதாக கூறும் எடப்பாடி பழனிசாமி அணியினர், தலைமை கழக நிர்வாகிகள் சார்பாக பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க உள்ள உறுப்பினர்களுக்கு தனித்தனியே தலைமை கழக நிர்வாகிகள் சார்பாக அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. வழக்கமாக அதிமுக பொதுச்செயலாளர், பின்னர் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பாக பொதுக்குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வந்த நிலையில், முதல்முறையாக தலைமைக் கழக நிர்வாகிகள் பெயரில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.