திருவண்ணாமலை மாவட்டம் போளூரில், வங்கியில் வேலை செய்யும் இளைஞர் ஒருவருக்கும், பட்டதாரி இளம் பெண்ணுக்கும் திருமணம் செய்வதாக பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு மணப்பெண் அழைப்பும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருமணம் நேற்று காலை போளூரில் உள்ள கோவிலில் நடைபெற்றது. மணமக்களின் பெற்றோர்கள் உட்பட உறவினர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்திருந்தனர். பின்னர், மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டினார்.
அந்த தாலியை ஏற்றுக் கொண்ட மணப்பெண், கழுத்தில் தாலி ஏறிய அடுத்த வினாடியே, எனக்கு மணமகனைப் பிடிக்கவில்லை என்று கூறி தாலியை கழற்றி வீசி எறிந்தார். இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இரண்டு வீட்டாரும் இது குறித்து மணமகளிடம் விசாரித்தனர். மேலும், இந்த விவகாரம் போளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷுக்கு தெரிந்து அவரும் போலீஸாரும் மண்டபத்திற்கு வந்தனர். பின்னர், அவர்கள் மணமகளிடம் விசாரித்தனர்.
அப்போது அவர் எனக்கு மணமகனை பிடிக்கவில்லை என்று திரும்பத் திரும்ப கூச்சலிட்டவாறு கூறினார். போலீஸார் மற்றும் உறவினர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அந்த பெண் சமாதானமாகவில்லை. எனக்கு மணமகனைப் பிடிக்கவில்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தார். இதனைத் தொடர்ந்து மணமகளையும், பெண் வீட்டாரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பின்னர் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர் ஒருவரின் பெண்ணுடன் மணமகனுக்கு உடனடியாக அங்கே திருமணம் நடைபெற்றது.