பள்ளிப் பேருந்தில் மூன்றரை வயது சிறுமியை ஓட்டுனரே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்..
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. மூன்றரை வயது நர்சரி பள்ளி மாணவி ஒரு பெண் உதவியாளர் முன்னிலையில் பள்ளி பேருந்து ஓட்டுனரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.. அந்த பெண் உதவியாளர் இந்த குற்றத்தை மூடி மறைக்க உதவியதாக கூறப்படுகிறது.. பாதிக்கப்பட்ட சிறுமியின் உடலில் அடையாளங்களைக் கண்டு என்ன நடந்தது என்று அவரின் தாய் கேட்ட போது இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர் பள்ளி நிர்வாகத்தை கேட்ட போது, பள்ளி நிர்வாகம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்ததாக கூறப்படுகிறது.. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.. அந்த புகாரின் பேரில், ஓட்டுநர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.. அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டது. குற்றத்தை மறைக்க முயன்ற பெண் உதவியாளரும் கைது செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா இதுகுறித்து பேசிய போது “ குற்றம் சாட்டப்பட்ட இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.. பள்ளி அதிகாரிகளும் குற்றத்தை மறைக்க முயன்றுள்ளனர்.. அவர்களும் விசாரிக்கப்படுவார்கள்.. அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்..” என்று கூறினார்.