தமிழ்நாட்டில் இன்று சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் சேலம், ஈரோடு, தருமபுரி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களிலும் லேசான இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்கும். மன்னார் வளைகுடா மற்றும் அதனையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடதமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.
அதேபோல், சென்னையை பொறுத்தவரை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 96.8-98.6 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.