தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் படி மின்னணு குடும்ப அட்டையில் சேர்க்கப்பட்டிருக்கும் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து அனைத்து கடையிலும் குடும்ப அட்டைதாரர்களின் கைரேகையை ரேஷன் கார்டுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது .
ரேஷன் அட்டைதாரர்கள் தங்களது வசதிப்படி நியாய விலை கடைகளுக்கு சென்று தங்களது கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் குடும்ப அட்டைகாரர்களை ரேஷன் கடைக்கு வரவழைத்து அவர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் குடும்ப அட்டைதாரர்களை கட்டாயப்படுத்தி நியாய விலை கடைக்கு வரவழைத்து கைரேகை பதிவு செய்யக்கூடாது. அவர்கள் வசதி படக்கூடிய நேரத்தில் நியாய விலை கடைகளுக்கு வந்து கைரேகை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் கைரேகை பதிவு செய்யும் குடும்ப அட்டைதாரர்களிடம் ஆவணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் நியாய விலை கடைகளில் கைரேகை பதிவு செய்யாத குடும்ப அட்டைதாரர்களின் பெயர்கள் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்படாது என தமிழக அரசு முன்னர் அறிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. ரேஷன் கடைகளுக்கு சென்று கைரேகை பதிவு செய்வதில் உள்ள சிரமங்களை மக்களுக்கு நீக்குவதற்காக தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.