எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் சுயநிதி மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்கான ‘ஆன்லைன்’ விண்ணப்ப பதிவு, செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கியது. ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பித்து வருகின்றனர்.

விண்ணப்பப் பதிவு அக்.3ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்று மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டது. இதுவரை 35ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இன்று மாலையுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. விரைவில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கவுன்சிலிங் அறிவிப்பாணை வெளியிடப்படும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.