விபத்தின்போது காலில் சிக்கிக் கொண்டகற்களை அகற்றாமல் தையல் போட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட கொடுமை நடந்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில்தான் இத்தகைய கொடுமையான சிகிச்சை நடந்துள்ளது. ஆவணம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கீழே விழுந்து காலியல் காயம் ஏற்பட்டது. அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சென்ற மதிவாணனுக்கு அங்கிருந்த ஊழியர்கள் காலில் சிகிச்சை பார்த்து தையல் போட்டனர்.
பின்னர் வீட்டுக்கு வந்த மதிவாணனுக்கு வலி குணமாகவில்லை. தொடர்ந்து காலில் வலி ஏற்பட்டதால்மிகவும் அவதிப்பட்டார் இதையடுத்து அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது மருத்துவர்கள் எக்ஸ்ரே எடுத்து பார்த்தனர். தையல் போட்ட பகுதியில் 5 க்கும் மேற்பட்ட கற்கள் இருந்துள்ளது.
விபத்தின் போது கீழே விழுந்ததில் கற்கள் காலின் உள்ளே புகுந்துள்ளது. இதை அறந்தாங்கி அரசு மருத்துவமனை செவிலியர்கள் வெளியே எடுக்காமல் அதன் மேலேயே தையல் போட்டுள்ளனர். இதைக் கூறிய மருத்துவர்கள் தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பின்னர் 5க்கும் மேற்பட்ட கற்களை அகற்றினர். பணியின் போது செவிலியர்கள் அலட்சியம் காட்டியதே இதற்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.