ஹோலி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வட இந்தியாவில் ஹோலி பண்டிகை மார்ச் 14ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகையாகும். அதாவது, பனி காலத்திற்கு விடை கொடுத்து, வெயில் காலத்தை வரவேற்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.
வட மாநிலங்களில் இந்த பண்டிகையை மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும். வண்ண வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் தூவி, கொண்டாடி மகிழ்வார்கள். மேலும், ஒருவரை ஒருவர் சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறி, கலர் பொடிகளைத் தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள்.
அந்த வகையில், நாளைய தினம் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் போலீஸ் பாதுகாப்பு பலத்தப்படுத்தப்பட்டுள்ளது. நாளைய தினம் வெள்ளிக்கிழமை என்பதால், இந்துக்கள் ஹோலிப் பண்டிகை கொண்டாடும் அதே வேளையில், இஸ்லாமியர்கள் தொழுகையை மேற்கொள்வார்கள். சுமார் 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹோலி பண்டிகையும், ஜும்ஆ தொழுகை தினமும் ஒரே நாளில் வருவதாக கூறப்படுகிறது.
இதனால் பாதுகாப்பு கருதி லக்னோ, உத்தரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமூக ரீதியாக உணர்திறன் வாய்ந்த பகுதிகளில் கடுமையான கண்காணிப்பு, ரோந்து மற்றும் கண்காணிப்புக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும், உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ‘சவுபாய்’ என்ற பேரணி நடைபெறவுள்ளது.
இந்த பேரணி செல்லும் பாதையில் 10 பள்ளிவாசல்கள் உள்ளன. தற்போது இந்த பள்ளிவாசல்கள் அனைத்தும் தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறை எஸ்.பி. சிரீஷ் சந்திரா கூறுகையில், “சமூக நல்லிணக்கத்தை பேணுவதற்கும், இரு சமூகத்தினரும் தங்கள் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதோடு, இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.