மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவது, திறமைகளை மேம்படுத்துவது மற்றும் அறிவியல், ஆராய்ச்சி உள்ளிட்ட முன்னணி துறைகள் உள்ளிட்ட அனைத்திலும் உலகிலேயே சீனா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து நாட்டு அரசாங்கங்களின், முதலீட்டிற்கும், நாட்டின் முன்னேற்றத்துக்குமான தொடர்பை மையமாகக் கொண்டு பாதுகாப்பு, விண்வெளி, எரிசக்தி மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றை கண்காணித்து ஆஸ்திரேலிய மூலோபாய கொள்கை நிறுவனம் (Australian Strategic Policy Institute (ASPI)) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் வெளியுறவுத்துறையின் நிதியுதவியால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு தொடர்பான அறிக்கை மார்ச் 2, 2023 அன்று வெளியிடப்பட்டது.
அதில், சீனா பல்வேறு விஷயங்களில் சர்ச்சைக்கு உட்பட்டாலும், மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதற்கும் திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் சீனாவுடனான பந்தயத்தில் அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் மிகவும் பின்தங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது. 44 முக்கியமான மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் 37 இல் “அதிர்ச்சியூட்டும் முன்னணி” துறைகளில் சீனா ஏகபோகமாக முன்னணியில் உள்ளதாகவும் இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், சில துறைகளில், உலகின் சிறந்த 10 ஆராய்ச்சி நிறுவனங்கள் அனைத்தும் சீனாவை தளமாகக் கொண்டுள்ளன என்று அந்த அறிக்கை காட்டுகிறது. ஆராய்ச்சிகளுக்கு அரசு வழங்கும் முதலீடே நாட்டை முன்னிறுத்தும் என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. உயர் செயல்திறன் கொண்ட கணினி, குவாண்டம் கம்ப்யூட்டிங், சிறிய செயற்கைக்கோள்கள் மற்றும் தடுப்பூசிகளில் உலகளாவிய ஆராய்ச்சிக்கு அமெரிக்கா அதிக முதலீடுகளை ஒதுக்கினாலும்கூட, சீனாவுடன் ஒப்பிடும்போது அமெரிக்கா பெரும்பாலும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
மேற்கத்திய ஜனநாயக நாடுகள் உலகளாவிய தொழில்நுட்ப போட்டியை இழந்து வருகின்றன, இதில் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களும் இடம்பெற்றுள்ளன” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில், “சீனா உலகின் உயர் தாக்க ஆய்வுக் கட்டுரைகளில் 48.49% ஐ ஹைப்பர்சோனிக்ஸ் உட்பட மேம்பட்ட விமான இயந்திரங்களில் உருவாக்கியது, மேலும் இது உலகின் சிறந்த 10 ஆராய்ச்சி நிறுவனங்களில் ஏழு சீனாவுடையது என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.