பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) டாக்டர் அபிஷேக் ஸ்வர்ன்கர் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். 39 வயதாகும் செக்டார் 67 இல் வாடகை வீட்டில் அவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் தனது வீட்டின் அருகே வாகன நிறுத்துமிடத்தில் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு வன்முறையாக மாறியதில் அபிஷேக் உயிரிழந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு டாக்டர் அபிஷேக் ஸ்வர்ன்கர் பக்கத்து வீட்டுக்காரர் மோண்டியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், இந்த வாக்குவாதம் ஒருகட்டத்தில் வன்முறையாக மாறியதாகவும் கூறப்படுகிறது. அபிஷேக்கை கீழே தள்ளிய மோண்டி அவரை கடுமையாக தாக்கி உள்ளார். இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தைச் சேர்ந்த டாக்டர் அபிஷேக் ஸ்வர்ன்கர், சர்வதேச பத்திரிகைகளில் இடம்பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். சுவிட்சர்லாந்தில் பணிபுரிந்த அவர், சமீபத்தில் இந்தியா திரும்பி IISER-ல் திட்ட விஞ்ஞானியாக சேர்ந்தார். அபிஷேக்கிற்கு சமீபத்தில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மேலும் அவரது சகோதரி தனது சிறுநீரகங்களில் ஒன்றை அவருக்கு தானம் செய்தார். தற்போது அவர் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த சூழலில் தான் அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட மோதலில் அவர் உயிழந்துள்ளார்.
ஐடி நிபுணரான பக்கத்து வீட்டுக்காரர் மோன்டிக்கு, அவரது உடல்நிலை குறித்து அறிந்திருந்தும், அவரை கொடூரமாகத் தாக்கியதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். இந்த வாக்குவாதம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.
மோன்டி உட்பட சிலர், அபிஷேக்கின் பைக்கின் அருகே நிற்பதை சிசிடிவி கேமரா காட்சிகள் காட்டுகிறது. . பின்னர் அபிஷேக் இரு சக்கர வாகனத்தை நோக்கி நடந்து சென்று அதை அகற்றத் தொடங்குகிறார். வாக்குவாதம் ஏற்பட்டதை தொடர்ந்து மோன்டி டாக்டர் ஸ்வர்ண்கரை தரையில் தள்ளி அவரைத் தாக்கத் தொடங்குகிறார். அவர்களது குடும்பத்தினர் தலையிட்டு மோன்டியை இழுத்துச் செல்கிறார்கள். டாக்டர் அபிஷேக் ஸ்வர்ண்கர் தரையில் கிடப்பதையும் பார்க்க முடிகிறது.
Viral Video CCTV : पंजाब के मोहाली में पार्किंग को लेकर झगड़ा, वैज्ञानिक की मौत | N18S#punjab #punjabnews #mohalinews #news18indianumber1 #shorts pic.twitter.com/Om40oM9kJK
— News18 India (@News18India) March 13, 2025
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். “இன்று பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீசார் தெரிவித்தனர்.
அபிஷேக் ஸ்வர்ன்கரின் ஆராய்ச்சிக் கட்டுரை ஜர்னல் ஆஃப் சயின்ஸில் வெளியிடப்பட்டதாக IISER தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, அவருக்கு IISER இல் வாய்ப்பு கிடைத்தது.
IISER அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும் “நாங்கள் ஒரு புத்திசாலித்தனமான மனதை இழந்துவிட்டோம். இதுபோன்ற வன்முறைச் செயல் ஏற்றுக்கொள்ள முடியாதது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது..