பட்டியலின பெண் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 30 வயது மதிக்கத்தக்க பட்டியலின பெண். இவருக்குத் திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை அன்று அந்தப் பெண் தனியாக வீட்டில் இருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த ஷகுர் கான் என்ற இளைஞர், அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண் மீது தீ வைத்துவிட்டு தப்பியோடியுள்ளான். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அந்தப் பெண் பல்மோராவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
பின்னர், உடல்நிலை மோசமானதைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக ஜோத்பூரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணின் கணவர் கொடுத்த புகாரின் பேரில் ஷகுர் கான் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஷகுர் கானை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.