மே மாதத்தில் மட்டும் 46,000க்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை அந்நிறுவனம் தடை செய்துள்ளது.
குழந்தை பாலியல் சுரண்டல், நிர்வாணம் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்காக 43,656 கணக்குகளை நீக்கியதாக ட்விட்டர் நிறுவனம் தனது மாதாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.. அதே நேரத்தில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்காக 2,870 ட்விட்டர் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. ஏப்ரல் 26, 2022 முதல் மே 25, 2022 வரையிலான காலக்கட்டத்தில் இந்தியாவில் 1,698 புகார்களை இந்தத் தளம் பெற்றுள்ளது. ஆன்லைன் துஷ்பிரயோகம்/துன்புறுத்தல் (1,366), வெறுக்கத்தக்க நடத்தை (111), தவறான தகவல் தொடர்பான புகார்களும் இதில் அடங்கும். வயது வந்தோருக்கான உணர்திறன் உள்ளடக்கம் (28), ஆள்மாறாட்டம் (25), ஆகியவை தொடர்பாக புகார் வந்துள்ளதாகவும் ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் “எங்கள் மேடையில் அனைவரையும் கருத்து சொல்ல நாங்கள் வரவேற்கிறோம் அதே வேளையில், மற்றவர்களின் குரல்களை அமைதிப்படுத்த பயமுறுத்தி துன்புறுத்தும், அச்சுறுத்தும், மனிதாபிமானமற்ற நடத்தையை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று ட்விட்டர் தெரிவித்துள்ளது.
இதே போல் புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 க்கு இணங்க மே மாதத்தில் இந்தியாவில் 19 லட்சத்திற்கும் அதிகமான மோசமான கணக்குகளை தடை செய்ததாக வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.. ஏப்ரலில் இந்தியாவில் 16.6 லட்சத்திற்கும் அதிகமான மோசமான கணக்குகளை தளம் தடை செய்தது.
புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 இன் கீழ், 5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்ட பெரிய டிஜிட்டல் மற்றும் சமூக ஊடக தளங்கள், மாதாந்திர இணக்க அறிக்கைகளை வெளியிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது..