வைகுண்ட ஏகாதசியையொட்டி, தமிழகம் முழுவதும் பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்படுகிறது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தமிழகம் முழுவதும் பெருமாள் திருக்கோயில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்படுகிறது. அந்தவகையில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில், உலகப் பிரசித்திபெற்ற வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த டிச.12ம் தேதி மாலை, திருநெடுந்தாண்டகம் வைபவத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, பகல்பத்து உற்சவம் டிச.13ம் தேதி துவங்கியது.
தினந்தோறும் பல்வேறு வகையான சிறப்பு அலங்காரங்களில் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்ட நம்பெருமாள், அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பரம்பதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று (சனிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடந்தது.
உற்சவர் நம்பெருமாள் ரத்தினஅங்கி, பாண்டியன் கொண்டை, ஆண்டாள் கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து அதிகாலை, 3.30 மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து துலா லக்கினத்தில் புறப்பாடு கண்டருளினார். தொடர்ந்து, இரண்டாம் பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாசல் வழியே மூன்றாம் பிரகாரத்திற்கு வந்த நம்பெருமாள், துரைப்பிரதட்சணம் வழியாக பரமபதவாசல் பகுதிக்கு வந்தார். முன்னதாக விரஜாநதி மண்டபத்தில் அவர் வேத விண்ணப்பம் கேட்டருளினார். அதனைத்தொடர்ந்து காலை, 4 மணியளவில் பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
அப்போது, நம்பெருமாள் பக்தர்கள் புடைசூழ, “ரங்கா.. ரங்கா.. கோவிந்தா.. கோவிந்தா..” கோஷம் விண்ணதிர, பரமபதவாசலை கடந்து வெளியே வந்தார். மணல்வெளி, நடைப்பந்தல், தவுட்டரவாசல் வழியாக ஆயிரக்கால் மண்டபத்தின் எதிரில் உள்ள திருக்கொட்டகைக்கு காலை 4.30 மணிக்கு வந்தடைந்தார். அங்கு நம்பெருமாள் சுமார், 1 மணிநேரம் பக்தர்களுக்கு சேவை வழங்கினார்.
அதன்பின் காலை, 6 மணிக்கு சாதரா மரியாதையாகி, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் காலை, 7.30 மணிக்கு எழுந்தருளுவார். காலை, 8.30 மணியிலிருந்து இரவு, 7.30 மணிவரை பொதுஜனசேவை நடைபெறும். இதேபோல், 105 திவ்ய தேசங்களான, ஸ்ரீவில்லிபுத்தூர், திருவல்லிகேணி, உள்ளிட்ட கோயில்களிலும் வைகுண்ட ஏகாதேசியையொட்டி மக்கள் திரளாக கலந்துகொண்டு வழிபட்டு செல்கின்றனர்.