ரயில்களில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் தினமும் இயக்கப்படும் பல ஆயிரம் ரயில்களில் கோடிக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, தொலை தூர நகரங்களுக்கு செல்லும் நடுத்தர மக்களின் முதல் தேர்வாக ரயில்தான் இருக்கும். பாதுகாப்பான பயணம், கட்டணம் குறைவு, டாய்லட் வசதி உள்ளிட்டவை இருப்பதால் அனைத்து தரப்பு பயணிகளும் ரயில்களில் பயணிக்க விரும்புகின்றனர்.
இதற்கிடையே, பயணிகளின் வசதிக்காக ரயில்களில் பல்வேறு வசதிகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தி வருகின்றனர். வந்தே பாரத் உள்ளிட்ட சொகுசு ரயில்களும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றனர். விரைவில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், ரயில்களில் ஏடிஎம் வசதியை கொண்டு வர ரயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. பரிசோதனை அடிப்படையில் தற்போது மும்பை – மன்மாத் இடையே ஓடும் பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. ரயிலின் ஏசி வசதி கொண்ட பெட்டியில் இந்த ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளதாகவும், தனியார் வங்கியுடன் இணைந்து இந்த முயற்சியை ரயில்வே கையிலெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இது விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “ரயிலின் கடைசி பெட்டியின் கடைசி பக்கத்தில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த இடம் பேண்ட்ரிக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடம். ஏடிஎம்களின் பாதுகாப்பிற்காக ஷட்டர் டோர் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ரயில்வே பணிமனையில் பெட்டிகளில் சில மாற்றங்கள் இதற்காக கொண்டு வரப்பட்டது” என்றனர்.