காலரா பரவல் காரணமாக தமிழக மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”புதுச்சேரியில் இதுவரை 39 பேருக்கு காலரா இருப்பது தெரியவந்துள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை காரைக்கால் சுற்றியுள்ள தமிழக மாவட்டங்களை கண்காணித்து வருகிறோம். குறிப்பாக, நாகை மாவட்டத்தின் திருமருகள், கணபதிபுரம், நாகூர், மயிலாடுதுறை மாவட்டத்தின் திருக்கடையூர், சங்கரன் பந்தல், திருவாரூர் மாவட்டத்தின் கொல்லாபுரம், வெல்லாங்குடி ஆகிய காரைக்காலை ஒட்டியுள்ள பகுதிகளுக்கு நேற்று சென்ற சுகாதாரத்துறையினர் நேரடியாக அங்குள்ள குடிநீரை ஆய்வு செய்தனர்.
பொது இடங்களில் மலம் கழிப்பதால் ஏற்படும் நோய் பரவல் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அத்துடன் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவற்றுக்கு தேவையான மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். மக்களுக்கு காய்ச்சிய குடிநீரை பருகுதல், உணவை நன்றாக வேக வைத்து உண்ணுதல் ஆகிய விழிப்புணர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. புதுவை அருகே இருப்பதால் நோய் பரவும் அபாயம் காரணமாக காரைக்காலுக்கு அருகில் உள்ள பகுதிகளில் கண்காணிப்பினை வலுப்படுத்தி உள்ளோம். இது தொடர்பாக பொது சுகாதாரத்துறை சார்பில் குழு ஒன்றை அனுப்பி வைத்துள்ளோம்” என்றார்.