திருவண்ணாமலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”விஜய்யிடம் ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளை மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் பல்வேறு யூகங்களுக்கு விடை சொல்வதிலேயே குறியாக இருந்தார். தனக்கு எதிரான விமர்சனங்களை பற்றி அல்லது இனி செய்யப் போகிற விமர்சனங்களை பற்றி விளக்கம் சொல்வதிலேயே அதிகநேரத்தை எடுத்துக் கொண்டார்.
நண்பர்கள் யார் யார் என்பதை அடையாளம் காட்டுவதை விட தன்னுடைய எதிரிகள் யார் என்று அடையாளம் காட்டுவதிலேயே ஆர்வம் காட்டினார். பிளவுவாத சக்திகள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் வெளிப்படையாக கூறவில்லை. மேம்போக்காக பேசி இருக்கிறார். சிறுபான்மையினர் மீதான விஜயின் நிலைப்பாடு என்ன? என்பது தெளிவாக தெரியவில்லை.
இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் பாசிச கட்சிகள் என விஜய் கூறுகிறாரா? பாசிச கட்சி என்றால் அது பாஜக மட்டும் தான். நாங்கள் அதை எதிர்க்கிறோம். பாஜக எதிர்ப்பில் விஜய் உறுதியாக இல்லை. அதை நம்மால் உணர முடிகிறது. தவெக தலைவர் விஜயிடம் எதிர்பார்த்த அறிவிப்புகள், கொள்கை பிரகடனங்கள் இல்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது. திமுக மற்றும் திமுக அரசை, கலைஞர் குடும்பத்தை எதிர்ப்பதாகவே விஜயின் பேச்சு உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று இன்னும் முதல் அடியே எடுத்து வைக்காத தவெக கூற முடியாது. அதிமுக, பாஜகவை விஜய் கண்டுகொள்ளவில்லை. அவர்கள் நண்பர்களா என்பதை விஜய் விளக்க வேண்டும். விஜய் பேச்சை நம்பி எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது. கூட்டணிக் கட்சியினருக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த விஜய் முயற்சிக்கிறார்” என்று தெரிவித்தார்.
Read More : 2026இல் விஜய் கட்சியுடன் அதிமுக கூட்டணியா..? எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பதில்..!!