வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, வேலூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து எழுதிய கடிதத்தில்; சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றி, கன மற்றும் மிக கனமழை பெய்யும் நிலையில், நிலைமையை கையாள வேண்டும். இதற்காக மாவட்டம் முழுவதும், தேவையான முன்னெச்சரிக்கை நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வரும் 17-ம் தேதி வரையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கியுள்ள மழை தொடர்பான எச்சரிக்கையையும் கடிதத்துடன் இணைத்து அனுப்பியுள்ளார்.