குழந்தைகளுக்கு அதிக நேரம் டயப்பர் போடுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் கோடைக்காலத்தில் கண்டிப்பாக டயப்பரை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
குழந்தைகளுக்கு டயப்பரை குறைவான நேரமே பயன்படுத்த வேண்டும். அதுவும் துணி டயப்பர் பயன்படுத்துவதே நல்லது. அதிகபட்சம் மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குமேல் பயன்படுத்தக்கூடாது. அதிக நேரம் பயன்படுத்துவதால் சிறுநீர், மலம் ஏற்படுத்தும் ஈரப்பதத்தால் குழந்தையின் சருமத்தில் `டயப்பர் டெர்மடிடிஸ்’ (Diaper Dermatitis) எனப்படும் தோல் அலர்ஜி ஏற்படும். இதனால் குழந்தைகளின் பின்புறமும், தொடைப்பகுதிகளும் சிவந்து போகும். அரிப்பும் ஏற்படும், எனவே, குறிப்பிட்ட நேரத்துக்கு ஒருமுறை டயப்பரை மாற்ற வேண்டும்.
கோடைக்காலத்தில் அதிகநேரம் டயப்பர் பயன்படுத்தினால், அதிகப்படியான வியர்வை, சிறுநீர், மலம் காரணமாக தோல் அரிப்பு, பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படும். சருமம் சிவந்தோ, தடித்தோ காணப்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. தொற்றுகள் ஏற்பட்டுவிட்டால், குளிர்ந்த நீரை துணியில் நனைத்து அப்பகுதிகளில் அடிக்கடி ஒத்தடம் கொடுக்க வேண்டும். ஆடைகள் அணிவிக்காமல் காற்றோட்டமாக விடவேண்டும்.
`டயப்பர் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். அப்படிப் பயன்படுத்துவதாக இருந்தால், அரை மணிநேரத்துக்கு ஒருமுறை குழந்தை சிறுநீர், மலம் கழித்திருக்கிறதா? என்பதைச் சோதித்துப்பார்க்க வேண்டும். சிறுநீர் அல்லது மலம் கழித்திருந்தால், உடனடியாக டயப்பரைக் கழற்றி, அந்தப் பகுதிகளைச் சுத்தம் செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்பட்டால், வேறு நிறுவன டயப்பர்களை மாற்றிப் பயன்படுத்துவது நல்லது. விழுப்புணர்வுக்காக: கழிவறைகளைப் பயன்படுத்த குழந்தைகளை 2 வயதிலிருந்தே பழக்கப்படுத்துங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.