சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, ”மழையை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளது. சென்னையை பொறுத்தவரை நவ.29, 30, டிச.1, 2 ஆகிய தேதிகளில் புயல் தாக்கும் என்று கூறியிருந்தனர். ஆகையால், சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுத்துள்ளனர். சென்னைக்கு மழை இருக்கும் கூறியுள்ள நிலையில், மழையாக, புயலாக இருந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.
சென்னை மாநகராட்சி சார்பில், தாழ்வான பகுதிகளில் 110 மோட்டார்கள் பொருத்தப்பட்டன. தற்போது கூடுதலாக 60 மோட்டார்கள் வாங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பகுதிகளிலும் மழையால் சேரும் குப்பைகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 28,000 பணியாளர்கள் தற்போது பணியில் உள்ளனர். மழைக்காலத்தின் போது வார்டு ஒவ்வொன்றிலும் கூடுதலாக 10 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்களும் பணியில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
ஃபெங்கல் புயல்
வங்கக்கடலில் தற்போது ஃபெங்கல் புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் பிற்பகல் 2.30 மணியளவில் உருவானதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் ஆனது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை பிற்பகலில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
சூறைக்காற்று
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (நவ.30) சூறாவளி வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் அதிகபட்சமாக மணிக்கு 70 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் கடலூர், விழுப்புரம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் பலத்த தரைக்காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னைக்கு ரெட் அலர்ட்
நாளை (நவ.30) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதேபோல் ராணிப்பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Read More : BREAKING | ”பயங்கர ஆக்ரோஷமா இருக்கும்”..!! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு சூறாவளி எச்சரிக்கை..!!