ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியுள்ளது.
இதற்கிடையே, இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மங்காத்தாவிற்கு பிறகு எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் படம் எடுத்துள்ளனர் என்று நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் மட்டுமே குட் பேட் அக்லி ரூ.100 கோடி வசூல் செய்திருப்பதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. உலகளவில் ரூ.180 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தான், அஜித்தின் குட் பேட் அக்லி பட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கருக்கு இசையமைப்பாளர் இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்றுள்ள ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி, இளமை இதோ ஆகிய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்காக 7 நாட்களுக்குள் படக்குழுவினர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.5 கோடி இழப்பீடு கேட்க வேண்டுமென்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளையராஜா அனுப்பிய நோட்டீஸுக்கு விளக்கம் அளித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் ரவிசங்கர், ‘குட் பேட் அக்லி’ படத்தில் இளையராஜா பாடல்களைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் விதிகளின்படி அனுமதி பெற்றுள்ளோம் என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். இப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பாடல்களுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். அந்த உரிமைகள் அனைத்தும் இசை லேபிள்களுக்கே உரியது. எனவே, நாங்கள் விதிகளின்படிதான் செயல்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
தான் இசையமைத்த பாடல்களை அனுமதியின்றிப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ளாத இளையராஜா, இதுபோல பல படங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி வருகிறார். கடந்தாண்டு கூட மலையாளப் படமான மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்களுக்கும், கூலி படத்தின் தயாரிப்பாளர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.