மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை (சி.ஏ.ஏ.) தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழக ஆளுநர் வாசிக்க வேண்டிய உரையில் இருந்ததை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.
இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் இன்றைய தினம் தொடங்கியது. ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கிய நிலையில், அவர் தமிழக அரசின் உரையை முழுவதுமாக படிக்க மறுத்துவிட்டு புறக்கணித்தார். அவர் ஒரு நிமிடம் மட்டுமே உரையை வாசித்துவிட்டு சபாநாயகருக்கு அருகே போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்துவிட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு , ஆளுநர் படிக்க வேண்டிய உரையை வாசித்தார்.
அதில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தினால், 2021- 22ல் நான்காம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2022 – 23ஆம் ஆண்டில் நாட்டிலேயே முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. வலுவான பொருளாதாரம், சமூக நல்லிணக்கமுமே தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ காரணம் ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழ்நாடு கண்டுள்ளது. நிதி ஆயோக்கின் 2024 ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தை மிஞ்சி நாட்டிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் நமது மாநிலம் பல பேரழிவுகளை சந்தித்த போதிலும், பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது. தமிழக வெள்ள நிவாரண நிதியை ஒன்றிய அரசு தராதது வருத்தமளிக்கிறது. சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்த தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று சாதிவாரி கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தும் என நம்புகிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமை எனும் கொள்கை கேள்விக்குறியாகிவிட்டது. சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை ஒரு போதும் தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என அந்த உரையில் இருந்ததை சபாநாயகர் அப்பாவு படித்தார்.