முதலமைச்சர் முக.ஸ்டாலினை, கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று நேரில் சந்தித்து தன் மகளின் மரணத்திற்கு நீதி கேட்டு மனு வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலினை மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் நேரில் சந்தித்தனர். அப்போது, அவர்களுக்கு முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்து, சட்டப்படி நியாயமான நடவடிக்கைகளை அரசு எடுக்கும் என்று உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமதியின் தாயார் செல்வி, ”இந்த கலவரத்தில் கலந்துகொள்ளாத அப்பாவி பள்ளி மாணவர்களைத் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். அவர்களுக்கும், இந்த வழக்கிற்கும் எந்த ஒரு
சம்பந்தமும் இல்லை. எனவே, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டேன். பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஜாமீன் கிடைக்கக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய கேட்டுக்கொண்டு உள்ளோம்.
ஜிப்மர் மருத்துவமனை நகல்கள் இன்னும் எங்களுடைய கைகளுக்குத் தரவில்லை. அந்த நகலை நாங்கள் மேல்முறையீடு செய்து தான் வாங்க முடியும். அப்பொழுது தான் ஜிப்மர் மருத்துவமனையில் என்ன தெரிவித்துள்ளனர் என்று தெரியவரும். முதல் மற்றும் இரண்டாவது உடற்கூராய்வில் வந்த முடிவுகளில் ஒரு சில விஷயங்களை சொல்லியும் ஒரு சில விஷயங்களை சொல்லாமலும் மறைக்கப்பட்டு முடிவுகள் வந்துள்ளன. நாங்கள் கேட்டுக்கொண்ட மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை சோதனை செய்திருந்தால் எங்களுக்கு திருப்தியாக இருந்திருக்கும்.
சிபிசிஐடி இந்த வழக்கில் விரைவில் நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். இந்த நிமிஷம் வரை நாங்கள் அவர்களை நம்பி வருகிறோம். பள்ளி நிர்வாக அழுத்தத்தின் காரணமாக மருத்துவமனை இந்த விஷயத்தில் மறைக்க வாய்ப்பு உள்ளது. இன்று வரை மருத்துவ நிர்வாகம் பெற்றோர்களிடம் சிசிடிவி காட்சியைக் காண்பிக்கவில்லை. 5 பேர் குற்றமற்றவர்கள் என்று ஜாமீனில் வெளிவரவில்லை. சிபிசிஐடி-க்கு கிடைக்கும் தகவல்களை முதலில் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வைத்து 2 மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், அது ஸ்ரீமதியின் நண்பர்கள் தானா என்பதை சிபிசிஐடி தெளிவாக தெரிவிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.