இந்தியா முழுவதும் ஒரே கால கட்டத்தில் கொண்டாடப்படும் திருவிழா தசரா தான். அனால், இந்தப் பண்டிகைக்கு இடத்துக்கு இடம் நவராத்திரி, தசரா, துர்கா பூஜை எனப் பெயர் மாறும். ஆயினும் அடிப்படை அம்மன் வழிபாடு. தசரா என்ற சொல்லும் இதே பொருளைக் குறிக்கின்றது. தென்னிந்தியாவில் நவராத்திரி விழாவாகவும், மேற்கு வங்கம் மற்றும் வட இந்தியாவில் துர்கா உத்சவமாகவும் கொண்டாடப்படுகின்றது. தமிழ் மாதமான புரட்டாசி மாதத்தின் அமாவாசை கழிந்த பத்தாம் நாள் விஜயதசமியானது அனுசரிக்கப்படுகின்றது. முந்தைய ஒன்பது நாட்களும் நவராத்திரியாகக் கொண்டாடப்படுகின்றது. தீமைக்கு எதிரான வெற்றியைக் குறிக்கும் இப்புனிதத் திருநாளை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஒவ்வொரு விதமாகக் கொண்டாடுகிறார்கள்.
மேற்குவங்கத்தில் துர்கையானவள் அரக்கன் மகிசாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனைக் கொன்ற பத்தாம் நாள் வெற்றியை மக்கள் விஜயதசமித் திருவிழாவாகக் கொண்டாடுகிறார்கள். உலக தர்மத்தைக் காக்க அரக்கனுடன் போரிட்டு வெற்றியை உலகிற்கு அர்ப்பணித்த துர்க்கையின் திருவுருவமானது ஊரின் பல பகுதிகளிலும் மண்டல்கள் அமைத்து காலை, மாலை பூஜை மற்றும் பஜன், தாண்டியா என்று ஊரே விழாக்கோலம் பூண்டு மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது. ஒன்பது இரவுகளும் அன்னை துர்க்கையானவள் சைலபுத்திரி, ப்ரம்மச்சாரினி, சந்த்ரகாந்தா, குஷ்மந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, கால்ராத்ரி, மஹாகெளரி மற்றும் சித்திதாத்ரி ஆகிய ஒன்பது அவதாரங்களில் காட்சியளிக்கிறாள்.
புலி, சிங்கம், கழுதை மற்றும் காளை போன்ற விலங்குகளை வாகனமாகக் கொண்டு கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றாள். நவராத்திரி, தசரா, துர்கா பூஜை மற்றும் துர்கா அஷ்டமி என்ற பெயர்களில் இவ்விழா மிக மிக சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மேலும், பத்தாம் நாள் துர்க்கையின் திருவுருவமானது தண்ணீரில் கரைக்கப்படுகின்றது. வட இந்தியாவில், விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான ராமர், ராவணனைக் கொன்ற நாளின் வெற்றியை மக்கள் ராம்லீலா என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். தசராவின் பத்தாவது நாள் கொண்டாட்டமாக ராம்லீலா அனுஷ்டிக்கப் படுகின்றது. அன்றைய தினம், ராவணன், கும்பகர்ணன் மற்றும் ராவணனின் மகன் மேகநாதன் ஆகிய மூன்று கொடும்பாவிகளை எரிக்கும் நிகழ்ச்சியுடன் தசரா நிறைவடைகின்றது.
தமிழ்நாட்டில் நவராத்திரித் திருவிழாவது தனித்துவமாகக் கொண்டாடப்படுகின்றது. பெரும்பாலான வீடுகளில் பொம்மைக் கொலுக்கள் வைத்தும், இன்னும் பல வீடுகளில் சரஸ்வதி பூஜை, விஜயதசமித் திருநாளாகவும் கொண்டாடப்படுகின்றது. இந்த தசரா பண்டிகை கொண்டாட்டம் நடைபெறும் பத்து தினங்களிலும் மைசூரு அரண்மனை வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். விஜயதசமியன்று தசரா ஊர்வலம் (ஜம்போ சவாரி) நடைபெறும். தங்க மண்டபத்தில் சாமுண்டேஸ்வரி தேவி எழுந்தருளப்பட்டு மைசூரு நகரின் பிரதான வீதிகளில் வலம் வருவாள்.
தமிழ்நாட்டின் குலசையில் தசரா விழா தோன்றியதற்கு ஒரு கதை உண்டு. முன்னொரு காலத்தில் வரமுனி என்ற முனிவர் இருந்தார். அவர் தவத்தில் சிறந்தவர். ஒரு நாள் அவரது இருப்பிடம் வழியாக மகா முனிவரான அகத்தியர் வந்தார். அவரை பார்த்தும், பார்க்காதது போல் இருந்த வரமுனி ஆணவ செருக்கால் மதிக்கவில்லை. மாறாக அகத்தியரை அவமதிக்கவும் செய்தார். இதை கண்டு கோபம் அடைந்த அகத்தியர் வரமுனிக்கு கடும் சாபம் கொடுத்தார். ‘வரமுனியே! நீ உன் உருவம் இழந்து எருமை தலையும், மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாய்!’ என்றார். அக்கணமே வரமுனி எருமை தலையும், மனித உடலும் பெற்று மகிஷாசுரனாக மாறினார். முனிவர்களை கொடுமைப்படுத்தினார்.
மகிஷாசுரனின் கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்தினர். அவர்கள் வேள்வியில் தோன்றிய அன்னை ஆதிபராசக்தி மகிஷாசுரனை அழிக்க, விரதம் இருந்து அவனோடு போர் புரிய புறப்பட்டாள். மகிஷாசுரனை அழித்த 10-ம் நாள் தசரா விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த வரலாற்று நிகழ்வை நினைவுகூரும் விதத்தில் தசரா விழாவின்போது பக்தர்கள் அம்மன், கடவுள் வேடங்களை தரித்து கொண்டாடி மகிழ்கிறார்கள். குலசேகரன்பட்டினம் தசரா விழாவின்போது ஆண்கள் காளி வேடமிட்டு வருவதை பார்க்கலாம். சமீபகாலமாக முத்தாரம்மன் அருள்பெற இளம்பெண்களும் காளி வேடம் போட தொடங்கி உள்ளனர்.