நாட்டில் அவசரநிலையை பிறப்பிக்கும் அதிகாரம் ரணில் விக்ரமசிங்கேவுக்கு இல்லை என்று இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, அதிபருக்கான கடமையை நிறைவேற்ற இயலாத நிலையில், பிரதமரான ரணில் விக்ரமசிங்கே செயல் அதிபருக்கான அதிகாரத்தை பெற்றிருப்பதாகவும், எனவே, செயல் அதிபர் என்ற முறையில் நாட்டில் அவசரநிலை பிரகடனத்தை பிறப்பித்திருப்பதாகவும், கொழும்பு மாநகரை உள்ளடக்கிய நாட்டின் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும் ரணில் விக்ரமசிங்கேவின் ஊடக செயலாளர் டினோக் கூலம்பகே தெரிவித்திருந்தார். மேலும், செயல் அதிபருக்கான அதிகாரத்தை ரணில் விக்ரமசிங்கேவுக்கு கோத்தபய ராஜபக்ச வழங்கியிருப்பதாக இலங்கை சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
எனினும், இதனை ஏற்க பிரதான எதிர்க்கட்சித் தலைவரான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் சஜித் பிரேமதாச மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ”அதிபரே நியமித்தலோ அல்லது அதிபர் பதவி காலியானாலோ அல்லது சபாநாயகரின் ஆலோசனையின் பேரில் தலைமை நீதிபதி அறிவித்தாலோ மட்டுமே இலங்கை பிரதமர் அதிபருக்கான அதிகாரத்தை பிரதமர் பெற முடியும் என தெரிவித்துள்ளார். இதில் எதுவுமே நடைபெறாத நிலையில், அதிபருக்கான அதிகாரத்தை பிரதமர் பயன்படுத்த முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தவோ, ஊரடங்கு உத்தரவை பிறப்பிக்கவோ ரணில் விக்ரமசிங்கேவுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிபர் கோத்தபய ராஜபக்ச இன்று பதவி விலகுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் அறிவித்திருந்தார். அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறும் அவர் பிரதமரை வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து, கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், அதிபர் மற்றும் பிரதமர் இருவரும் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இருவரும் பதவி விலகும் நிலையில், அதிபர், பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்று புதிய அரசு அமைக்கத் தயார் என பிரதான எதிர்க்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா அறிவித்தது.
எனினும் அதிபரோ, பிரதமரோ இன்னும் பதவி விலகாததால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவி விலக வலியுறுத்தி கொழும்பில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பிரதமர் மாளிகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்டத்தைக் கலைக்க பாதுகாப்புப் படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனினும், பாதுகாப்புப் படையினருக்கு அஞ்சாமல், போராட்டக்காரர்கள் மாளிகையை சூழ்ந்து வருகின்றனர். இதனால், அங்கு நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது.