மதுரையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தொலைநோக்கு பார்வையுடன் 2047-க்கான அடித்தளமாக பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதிகள் முறையாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 11 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளுக்கு தமிழ்நாடு அரசு முதலில் சம்மதித்தது. ஆனால், தற்போது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறான திசையில் திருப்பி தவறான தகவல்களை பேசி வருகிறார். மத்திய கல்வித்துறை அமைச்சர் மிக தெளிவாக சொல்லியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதில் என்ன பிரச்சனை உள்ளது..? ஆரம்பக் கல்வியில் தாய் மொழியை ஊக்குவிப்பது தான் புதிய கல்வி கொள்கையின் நோக்கம். முன்பு இருந்ததை போல இப்போது நாடு இல்லை. மக்கள் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் விரும்புகிறார்கள். மொழியை வைத்து அரசியல் செய்யக்கூடாது” என்றார்.