தமிழகத்தில் கடுமையான வெயில் கொளுத்தி வந்த நிலையில் ஏப்ரல் மே மாதத்தை விட செப்டம்பர் அக்டோபரில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும் விவசாயத்திற்கு எதிர்பார்த்த மழை அளவு இல்லை. இதனால் போதிய அளவு காய்கறி உற்பத்தி இல்லாததால் புகழ்பெற்ற திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் மற்றும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைகளுக்கு காய்கறி வரத்து வெகுவாக சரிந்துள்ளது.
சமையலுக்கு எந்த காய்கறிகளும் இல்லாமல் சமைத்து விடலாம் ஆனால் தக்காளி இல்லாத உணவு சமைப்பது இல்லத்தரசிகளுக்கு சிரமமான வேலை, அந்த வகையில் தக்காளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2 நாட்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ ரூ.55-க்கு விற்கப்பட்ட தக்காளி தற்போது மேலும் அதிகரித்து சதத்தை தாண்டி உள்ளது. மார்க்கெட்டில் உள்ள கடைகளில் ரூ.80 வரை விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட்டில் உள்ள கடை, காய்கறி கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110 வரை விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை அதிகரிப்பால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தக்காளி விலை 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் அங்கு தக்காளி உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் தற்போது தக்காளி கொள்முதல் செய்யப்படும் போதிலும், போதிய வரத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. அதனால், உற்பத்தி நடக்கும் இடத்திலேயே விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read more ; ஆயுதபூஜை, தீபாவளி விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்ல சிறப்பு ரயில்..!! – தெற்கு இரயில்வே