தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், ஜக்தியாலைச் சேர்ந்த இளைஞருக்கு திருமணம் செய்யப் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமண விருந்தில் என்னென்ன உணவுகள் பரிமாறப்பட வேண்டும் என மணமகன் வீட்டினர் பட்டியல் கொடுத்துள்ளனர். அதில், ஆட்டின் நல்லி எலும்பும் இருந்திருக்கிறது. இதற்கிடையில், திருமணத் தேதியும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திருமணத்தன்று, பரிமாறப்பட்ட உணவில் நல்லி எலும்பு இல்லை என்பதை அறிந்த மணமகன் வீட்டார், ஆத்திரமடைந்துள்ளனர்.
இது குறித்து மணமகள் வீட்டாரிடம் விசாரித்துள்ளனர். விருந்தில் நல்லி எலும்பு சேர்க்கப்படவில்லை எனக் கூறியதும், “நாங்கள் பட்டியல் கொடுத்தும் ஏன் நல்லி எலும்பை விருந்தில் சேர்க்கவில்லை. இது எங்களுக்கு நேர்ந்த அவமானம். இதற்குப் பிறகும் திருமணம் நடக்காது” எனக் காட்டமாகப் பேசியுள்ளனர். இதனால், இரு வீட்டாருக்கிடையே வாக்குவாதம் அதிகமாகியுள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்திற்கும் புகார் சென்றுள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறை அதிகாரிகள், இரு வீட்டாரையும் சமாதானப்படுத்த முயன்றார்கள். ஆனால், முடியவில்லை. இறுதியில் திருமணம் நின்றது. சாதாரண நல்லி எலும்புக்காகத் திருமணம் நிறுத்தப்பட்டது, சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது.