அதிமுக கட்சி பெயர், சின்னம், கொடிகளை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க அவசரம் காட்டுவது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமையை கொண்டு வந்த தீர்மானத்திற்கும், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை நீக்கிய தீர்மானத்துக்கும் உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு தெரிவித்த நிலையில் அதிமுக கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், கட்சியில் இருந்து தன்னை நீக்கியதற்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கொடி, சின்னம் பயன்படுத்த தடை விதிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இந்த மேல்முறையீட்டு வழக்கு, நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி உத்தரவில் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மனுவை பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஓபிஎஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், மனுவை இன்றே விசாரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், விரைவாக விசாரிப்பதற்கு என்ன அவசரம் என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர், இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் செயல்பட முடியாத நிலை உள்ளதாக கூறினார். இதனையடுத்து, நாளை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.