தற்போது கள்ளக்காதல் விவகாரம் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. நாள்தோறும் பல்வேறு கள்ளத்தொடர்பு குறித்த செய்திகளை நம்மால் பார்க்க முடிகிறது. கணவனை விட்டு,விட்டு வேறொரு நபருடன் செல்லும் மனைவி, கணவனை கொலை செய்துவிட்டு வேறொரு நபரை திருமணம் செய்து கொள்ளும் மனைவி, அதே போல மனைவியை கொலை செய்துவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் வாழும் கணவர் என்று பல்வேறு வகையான கள்ளத்தொடர்பு குறித்து செய்திகளை நாள்தோறும் செய்தித்தாள்களில் பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
அந்த வகையில், புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய கணவனை திட்டமிட்டு, கொலை செய்து விட்டு அவர் வீட்டில் கார் ஓட்டுனராக பணியாற்றிய ஒருவருடன் சேர்ந்து வாழ திட்டமிட்டது தெரிய வந்தது. புதுச்சேரி மாநிலம் பூமியான் பேட்டை ராகவேந்திரா நகர் பகுதியில் தான் இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது, அந்தப் பகுதியில் விவேக் பிரசாத்(40) அவரது மனைவி ஜெயதி(37) தம்பதிகள் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். விவேக் பிரசாத் ஒரு கட்டிடம் கட்டும் ஒப்பந்ததாரராக இருந்து வந்தார். அவரிடம் மேற்பார்வையாளராகவும், கார் ஓட்டுனராகவும் புதுச்சேரி சுல்தான் பேட்டையை சேர்ந்த பாபு என்ற ஷேக்பீர் முகமது( 40) என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் தான், ஷேக்பீர் முகமது மற்றும் ஜெயதி உள்ளிட்ட இருவரும் நெருங்கி பழகி வந்தனர். பின்னர் இருவருக்கும் இடையிலான பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இதனை தொடர்ந்து, தங்களுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த விவேக் பிரசாத்தை, இருவரும் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தனர்.
அதன்படி, கடந்த 2017 ஆம் வருடம் மே மாதம் புதுச்சேரி அருகே உள்ள பூத்துறை பகுதியில் கட்டிடப் பணியை பார்ப்பதற்காக சென்றபோது, விவேக் பிரசாத்தை உடன் சென்ற ஷேக்பீர் முகமது கத்தியால் குத்தி கொலை செய்து அங்குள்ள பள்ளத்தில் புதைத்து விட்டார்.
அதன் பிறகு ஜெயதி தன்னுடைய கணவரை காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். இது பற்றி விசாரணை நடத்திய காவல்துறையினர் ஒரு உண்மையை கண்டுபிடித்தனர். அதாவது, விவேக்பிரசாத் கொலை செய்யப்பட்டிருக்கிறார். என்பதும் அதற்கு அவருடைய மனைவியே உடந்தையாக இருந்ததும் காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆகவே பாபு என்ற ஷேக்பீர் முஹம்மது, ஜெயதி உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஐந்து வருடங்களாக நடத்தப்பட்டு வந்த இந்த விசாரணையில், விசாரணை அனைத்தும் முடிவுக்கு வந்த நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி செந்தில்நாதன் ஷேக் பீர் முஹம்மதுக்கு ஆயுள் தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால் மூன்று மாத கால சிறை தண்டனையும், விதித்து, அதோடு, ஜெயதிக்கு ஆயுள் தண்டனையும் 20000 ரூபாய் அபராதமும் அதை காட்ட தவறினால் கூடுதலாக ஆறு மாத காலம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.