கோவை மாவட்டத்தில் கணவன் தலையில் மனைவி கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம் நாயக்கனூர் பகுதியைச் சார்ந்தவர் செல்வராஜ் (60) இவரது மனைவி கலாமணி (55).. செல்வராஜ் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர் என தெரிகிறது இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் சண்டையிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்றிரவு வழக்கம் போல் மது குடித்து விட்டு வந்த செல்வராஜ் தனது மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
மனைவி வீட்டிலிருந்து வெளியேறிய பின்பும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார் செல்வராஜ். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி கலாமணி வெளியில் இருந்து கல்லை எடுத்து வந்து செல்வராஜின் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்திருக்கிறார் செல்வராஜ். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்ஸின் மருத்துவ உதவியாளர் செல்வராஜை பரிசோதனை செய்து அவர் இறந்ததாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செல்வராஜின் உடலை கைப்பற்றிய காவல் துறையை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து அவரது மனைவி கலா மணியை கைது செய்தது.