சென்னை நகர பேருந்தில் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த பலகை உடைந்ததால் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் நோக்கிச் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் சென்ற பேருந்து என்.எஸ்.கே நகர் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் பின்பக்க இருக்கைக்கு கீழிருந்த மரப்பலகை உடைந்துள்ளது. இதனால் இருக்கையில் இருந்த பெண் பயணி நிலை தடுமாறி பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்ட பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
மேலும் பேருந்தில் கீழே விழுந்ததும் அலறி துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்கவே அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். இதனால் கீழே விழுந்த நபர் பேருந்து சக்கரத்தில் சிக்காமல் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். லேசான காயங்களுடன் மீண்டும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.