முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி வரும் இன்று நடைபெறவுள்ளது. கோப்பையை வெல்லும் முனைப்பில் டெல்லி – மும்பை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மகளிர் பிரீமியர் லீக் 2023 தொடரின் எலிமினேட்டர் சுற்று, மும்பையில் நடைபெற்றது. இதில், உ.பி. வாரியர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது. டாஸ் வென்ற உத்தரப் பிரதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 182 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய நாட் ஸ்கிவர்-பிரண்ட், 9 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் என 38 பந்துகளில் 72 ரன்கள் விளாசினார்.
இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் அணி, தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கிரண் நவ்கீர் 27 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து போராடினார். மற்றொரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்ததால், 17.4 ஓவர்களிலேயே 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் உத்தரப் பிரதேச அணி இழந்தது. இதன்மூலம் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தநிலையில், முதல் மகளிர் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.