தமிழகத்தில் சில காலமாகவே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள்களின் உபயோகம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் சப்ளை செய்து வருவதாக வந்த தகவல்களை டெல்டா பிரிவு போலீசார் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் போதை மருந்துகளை கடத்துவதாக காவல்துறைக்கு வந்த தகவல்களை அடுத்து அந்தப் பகுதியில் அவர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் அங்குள்ள கொரியர் நிறுவனத்திற்கு தவறான முகவரியுடன் 600 மாத்திரைகளைக் கொண்ட ஒரு பார்சல் வந்தது . இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்தப் பார்சலில் கொடுக்கப்பட்டிருந்த செல்போன் என்னை தொடர்பு கொண்டு அந்த நபரை கொரியர் அலுவலகம் வர வைத்து விசாரித்தனர். அப்போது அந்த இளைஞர் கொடுத்த தகவல்கள் போலீசாரை திடுக்கிட வைத்தனர் .
நீரிழிவு நோயாளிகளுக்கு நரம்பு பாதிப்பு காரணமாக ஏற்படும் வலி நிவாரணி மருந்துகளை தண்ணீரில் கலந்து அதனை இளைஞர்கள் போதைக்காக பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது. சாதாரணமாக 300 முதல் 350 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த மருந்துகளை அந்த இளைஞர் 500 முதல் 1000 ரூபாய்க்கு மாணவர்களிடம் விற்பனை செய்திருக்கிறார். இது தொடர்பாக ஹைதராபாத்தில் இருந்து கொரியரின் மூலம் கடலூருக்கு இந்த மருந்தை வரவழைத்த கவியரசன்(23) என்ற இளைஞரை காவல்துறை கைது செய்தனர்.