பறக்கும் விமானத்தின் கழிவறையில் பெண் ஒருவர் செய்த செயலால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இச்சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவில் இருந்து பெங்களூருக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் கழிவறையில் சிகரெட் பிடிப்பதாக கேபின் குழுவினர் சந்தேகம் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கழிவறையில் இருந்து வெளியே வந்தார் பிரியங்கா சக்கரவர்த்தி என்ற பயணி. அதன் பிறகு கேபின் குழுவினர் கழிவறையை சென்று சோதித்துப் பார்த்தபோது சிகரெட் துண்டு ஒன்று அணையாமல் குப்பை தொட்டியில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து தண்ணீர் ஊற்றி சிகரெட் துண்டை அனைத்த விமான பணிப்பெண்கள் கேப்டனுக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து பிரியங்கா சக்கரவர்த்தியை ஒழுக்கமற்ற பயணியாக அறிவித்த கேப்டன் பெங்களூர் விமான நிலைய பாதுகாப்பு மையத்திற்கும் தகவல் கொடுத்தார். இதனைத் தொடர்ந்து விமானம் பெங்களூருவில் தரையிறங்கியதும் விமானத்தின் கழிவறையில் புகை பிடித்து மற்றவர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாக பிரியங்கா சக்கரவர்த்தியை விமான நிலைய காவல்துறை அதிகாரிகள் கைது செய்தனர். அவர் மீது இபிகோ 336 வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.