தஞ்சை மாவட்டத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக முப்பது வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் கொசுவப்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவரது மகள் ஷர்மிளா(22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். தீபாவளி விடுமுறைக்கு முன்பாக உறவினர் ஒருவரின் துக்க நிகழ்ச்சிக்காக ஊருக்கு வந்த இவர் தனது விடுப்பை நீடித்து தாய் மாமா வீட்டில் தங்கியிருக்கிறார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தாய் மாமா பிரபு உட்பட வீட்டில் உள்ள அனைவரும் சென்று விடவே ஷர்மிளா அவரது பாட்டியுடன் இருந்துள்ளார்.
அப்போது பாட்டி இவரை திட்டியதால் தன்னை வீட்டில் விடுமாறு தாய் மாமா பிரபுவிடம் செல்போன் மூலம் தெரிவித்து இருக்கிறார். அவர் வர முடியாத சூழ்நிலையில் தனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் கருப்பசாமி(30) என்ற நபரை அனுப்பி இருக்கிறார். கருப்பசாமி சர்மிளாவை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் சர்மிளா வீடு வந்து சேராததால் சந்தேகம் அடைந்த தாய் மாமா பிரபு இருவரது செல்போன் நம்பரையும் தொடர்பு கொண்டிருக்கிறார்.
அவர்கள் இருவரின் மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பதற்றமடைந்த அவர், இருவரையும் தேடிய போது, நாட்டானி என்ற பகுதிக்கு அருகே கற்பழிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார் சர்மிளா. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்ட கருப்பசாமி என்பவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் கருப்பசாமி இளம்பெண்ணை கடத்திச் சென்று ஏரியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் தன்னை காட்டிகொடுத்து விடுவார் என்ற பயத்தில் கொலை செய்ததும் தெரியவந்தது. திருமணம் ஆகி ஒரு வருடமே ஆன கருப்புசாமிக்கு 5 மாதத்தில் குழந்தை ஒன்று உள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் வல்லம் காவல்துறையினர் கருப்பசாமியை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.