பிரபல யூடியூபர் இர்ஃபான், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கூறி சர்ச்சையில் சிக்கினார், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இர்ஃபானின் மனைவிக்கு கடந்த ஜூலை 24ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 3 மாதங்கள் ஆன நிலையில், நேற்று அவரது யூடியூப் சேனலில் தனது மனைவியின் பிரசவ வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் குழந்தையின் தொப்புள் கொடியை, இர்ஃபானே வெட்டுகிறார். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாடு மருத்துவ சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தொப்புள் கொடியை இர்பான் வெட்டுவது தனிநபர் உரிமையை மீறும் செயல் என்றும் கூறுகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு, ஊரக நலப்பணி துறை இர்ஃபானுக்கு நோட்டீஸ் அனுப்பியது. மேலும், யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை நீக்க வேண்டும் என மருத்துவத்துறை சார்பாகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத்துறை அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில், தொப்புள் கொடி வீடியோவை தனது யூடியூபில் இருந்து இர்பான் நீக்கியுள்ளார். இந்த வீடியோ நீக்கப்படுவதற்கு முன்பு வரை சுமார் 16 லட்சம் பேர் அதனை பார்த்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவம் பார்த்த சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ரெயின்போ சில்ட்ரன்ஸ் மருத்துவமனையில் தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவ குழுவினரிடம் தமிழ்நாடு மருத்துவ குழு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக இளங்கோவன் என்பவர் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதனால் யூடியூபர் இர்ஃபான் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், “குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டிய வீடியோவை பதிவேற்றிய யூடியூபர் இர்ஃபானை மன்னிக்க முடியாது என்றும், இர்ஃபானின் செயல் மன்னிக்கக்கூடியது அல்ல, கண்டிக்கக்கூடியது” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் குறித்து யூடியூபர் இர்ஃபானிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Read More: குறையாத போர் பதற்றம்!. பாலஸ்தீன மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அனுப்பியது இந்தியா!.