தமிழகம் முழுவதும் மீண்டும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. எனினும் நோய்ப்பரவல் கட்டுக்குள் வராததால், 5 கட்டங்களை தாண்டி தற்போது 6-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இதனிடையே 5-ம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்ததால், கடந்த மாதம் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவை தொடங்கியது.
இந்நிலையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு திவிரமடைந்து வருவதால், இன்று பொதுப்போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இன்று முதல் 15-ம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. எனினும் பேருந்து சேவை நிறுத்தப்பட்ட தகவல் தெரியாத சிலர் பேருந்து நிலையம் வந்து ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். எனினும் அரசு ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிக்கு செல்ல சிறப்பு பேருந்து வழக்கம் போல் இயங்குகின்றன.

ஆனால் பேருந்து போக்குவரத்தை நம்பியிருக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால், சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ஒருபுறம் பொருளாதாரத்தை மேம்படுத்த தனியார் நிறுவனங்க்ள், தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளித்துள்ள அரசு, மறுபுறம் பேருந்து சேவையை நிறுத்தியுள்ளதால் பணிக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.