10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னிட்டு சென்னையில் ஜூன் 8ஆம் தேதி முதல் 41 இடங்களில் பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.
கொரோனாவின் காரணமாக கடந்த 2 மாதங்களாக நாடுமுழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள் வராத காரணத்தினால், ஊரடங்கு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை உள்ளிட்ட ஒரு சில இடங்கள் தவிர தமிழகத்தில் மற்ற இடங்களில் கட்டுப்பாடுகளுடன் அரசு பேருந்து இயக்கப்படுகின்றன. இதனிடையே நோய்ப் பரவலின் காரணாமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த 10ஆம் வகுப்பிற்கான போதுத் தேர்வுகள் மற்றும் சிபிஎஸ்இ தேர்வுகள் இம்மாதம் நடைபெறவுள்ளது.
இதையொட்டி பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் வசதிக்காகச் சென்னையில் 41 வழித்தடங்களில் அரசு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த தகவலை அறிவித்த முதன்மை கல்வி அலுவலர் அனிதா வரும் 8 ஆம் தேதியில் இருந்து ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை ஊழியர்கள் பள்ளிக்கு வர பேருந்துகள் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார்.