பிரதமர் மோடியின் செயல்பாட்டில் திருப்தி கொண்டு, நாடு முழுவதும் 66.2% பேர் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக சி வோட்டர் கருத்து கணிப்பு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு மக்களிடையே உள்ள செல்வாக்கு மற்றும் மாநிலங்களில் சிறந்த முதலமைச்சர் யார்? என்பது தொடர்பாக ஒவ்வொரு மாநிலத்திலும் 3,000 பேரிடம் சி வோட்டர் கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளது.
சிறந்த முதலமைச்சர்களுக்கான பட்டியலில், 82.96% மக்கள் ஆதரவுடன் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் முதலிடம் பிடித்திருக்கிறார். மக்களின் அதிருப்தியைப் பெற்ற மாநில முதலமைச்சர்களின் பட்டியலில் 5 வது இடத்தில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.

நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடிக்கு மொத்தம் 66.2% பேர் ஆதரவு அளித்திருக்கின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மொத்தம் 23.21% ஆதரவு தான் கிடைத்திருக்கிறது. பிரதமர் மோடியின் செயல்பாடுகளுக்கு ஒடிஷாவில் அமோக ஆதரவுகிடைத்துள்ளது. ஒடிஷாவில் 95.6% மக்கள் மோடி செயல்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், இமாச்சல் பிரதேசம், சத்தீஸ்கர், ஆந்திரா, ஜார்க்கண்ட், கர்நாடகா, குஜராத், அஸ்ஸாம், தெலுங்கானா மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 71.48% முதல் 93.95% வரையிலான மக்கள் மோடியின் செயல்பாடுகளுக்கு திருப்தி தெரிவித்துள்ளனர். ஆனால் தென்னிந்திய மாநிலங்களில் நிலவரம் வேறாக இருக்கிறது.
நாட்டிலேயே மோடிக்கு மிக குறைவான ஆதரவு தெரிவித்திருக்கும் இரு மாநிலங்கள் தமிழகமும் கேரளாவும்தான். இருப்பினும் தமிழகத்தில் 32.15% பேரும் கேரளாவில் 32.89% பேரும் மோடி அரசு மீது திருப்தி தெரிவித்திருக்கிறார்களாம்