சாத்தான்குளம் கொலை தொடர்பாக கொரோனா தன்னார்வலர்கள் 5 பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை எஸ்.ஐ. ரகுகணேஷ், எஸ். ஐ. பாலகிருஷ்ணன், காவலர் முருகன், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். தற்போது இந்த 5 பேரும் தற்போது பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். காவலர்கள் 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் அடுத்த வாரம் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர்.
இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் சித்ரவதை செய்த போது போலீசாருக்கு சிலர் உதவியதாக ஜெயராஜ குடும்பத்தினர் புகார் அளித்திருந்தனர். ஃப்ரெண்டஸ் ஆஃப் போலீஸ் இதில் காவல்துறையினருக்கு உதவியிருக்கிறார்கள் என்று தொடர்ந்து தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த சூழலில் 5 தன்னார்வ இளைஞர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பணிகளுக்காக போலீசாருக்கு உதவ தன்னார்வ இளைஞர்கள் சிலருக்கும் இந்த கொலையில் தொடர்பிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே ஃப்ரெண்டஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர் யாரும் சாத்தான்குளம் துணை சரக காவல்நிலையத்தில் பணியாற்றவில்லை என்றும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சாத்தான்குளம் கொலை குறித்து ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸார் பேசிய ஆடியோ ஒன்று வெளியானது. அந்த ஆடியோ குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.