சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில், காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் கொடூர தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தந்தை, மகன் இருவருக்கும் உரிய நீதிகிடைக்க வேண்டும் எனவும், காவல்துறையினருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். மேலும் காவல்துறையினரை எதிர்த்து சாலை மறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டஙளும் நடைபெற்றன.
இதனிடையே இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்த சூழலில் இதுதொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கும் மதுரை உயர்நீதிமன்றக் கிளை, சிபிஐ வழக்கு விசாரணையை ஏற்கும் வரை, இதனை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் உத்தரவிட்டது. அதன்படி உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி அதிகாரிகள், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் -இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ்,,ஏட்டு முருகன், தலைமைக் காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வாரம் அவர்களை ஐவரையும் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி திட்டமிட்டிருந்தது. மேலும் இதில் குற்றம்சாட்டப்படும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பை சேர்ந்தவர்களிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்ற அறிவிப்பாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும் தற்போது இந்த விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.