சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபெனிக்ஸ் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கைக்கு முற்றிலும் மாறான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளத்தில் கடந்த வாரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட
வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் என்பவர்கள் கோவில்பட்டி கிளை
சிறையில் வைத்து மரணமடைந்தனர். இந்த சம்பவத்தில் தந்தையும் மகனும் இருவரும், போலீசாரின் கடுமையான தாக்குதலினால் தான் உயிரிழந்ததாக அவர்களது குடும்பத்தினரும், சாத்தான்குளம் பகுதியை சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டினர்.

ஆனால் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையில், ஜெயராஜ் மற்றும் அவரது
மகன் ஃபென்னிக்ஸ் ஆகிய இருவரும் ஊரடங்கு நேரத்தில் கடைகளை அடைக்காமல், கூட்டம் கூடி கடையின் முன்பு பேசிக்கொண்டு இருந்ததாகவும், போலீசார் கடைகளை அடைக்க கூறியபோது, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அவர்கள் வாகனத்தில் ஏற மறுத்து தரையில் விழுந்து புரண்டதாலேயே காயம் ஏற்பட்டதாகவும் காவல்துறை தரப்பில் குறிப்பிட்டிருந்தனர். மேலும் ஜெயராஜ் மூச்சு திணறல் ஏற்பட்டும், ஃபென்னிக்ஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டும் உயிரிழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள வீடியோவில் சம்பவத்தன்று கடையின் வெளியே தனியாக நின்று கொண்டிருந்த ஜெயராஜை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். காவலர்களோடு ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் வாக்குவாதத்தில் ஈடுபடவில்லை. மேலும் ஃபென்னிக்ஸ் கடையின் உள்ளேயே இருந்துள்ளார். முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டது போல நேரம் இரவு 9 மணியை தாண்டவில்லை, மாறாக மாலை 7:30 மணி முதல் 8 மணிக்குள்ளையே காவலர்கள் ஜெயராஜை அழைத்துச் சென்றுள்ளனர்.

ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸை காவலர்கள் ஒரே நேரத்தில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சிசிடிவி காட்சியிலோ, ஃபென்னிக்ஸ் அவரது நண்பருடன் தனியாக இரு சக்கர வாகனத்தில் காவல்நிலையத்திற்கு செல்வது போன்ற காட்சிகளும் பதிவாகியுள்ளது. இதனால் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் சிசிடிவி காட்சியில் பதிவாகிய நிகழ்வுகளுக்கு முற்றிலும் முரண்பாடக உள்ளது. இதனால் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் உண்மைகு புறம்பான தகவல்களை பதிவுசெய்துள்ளதும் தெரிய வருகிறது.