கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு உள்ள சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும், ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் பிப்ரவரி மாதம் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வும், மார்ச் மாதம் 10-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை நடத்த சிபிஎஸ்இ முன்பு திட்டமிட்டிருந்தது.
இதனிடையே தற்போதைய சூழ்நிலையில் தேர்வுகளை ரத்து செய்யக் கோறி மாணவரின் பெற்றோர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்வில் மீதமுள்ள தேர்வுகளை ரத்து செய்வது குறித்து பரிசீலிக்கவும், இன்டர்னல் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கவும் சிபிஎஸ்க்கு அறிவுறுத்தியது.
இந்நிலையில் சிபிஎஸ்இ தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநில அரசுகளிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் முடிவு என மத்திய அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்த இயலாது என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்ததாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.